வரைவிலக்கணங்களும், சட்டங்களும்

தொழில் நுட்பம் சார் வன்முறையிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் உள்ளன.

தொழில் நுட்பம் சார் வன்முறையானது, “தொலைபேசி, இணையம், சமூக வலைத்தளங்கள், மற்றும் மின்னஞ்சல் போன்ற தொழில் நுட்ப தொடர்பாடல்கள் மற்றும் தகவல்களினைப் பாவித்து பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ புரியப்பட்ட அல்லது உடந்தையாக இருந்த அல்லது தூண்டிய பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் செயல்களில் உள்ளடங்கும்.”- முற்போக்கான தொடர்பாடல்களுக்கான கூட்டமைப்பு (Association for Progressive Communications – APC) தொழில்நுட்பம் சார் வன்முறையானது ஏனைய அனைத்து விதமான பால்நிலை அடிப்படையிலான வன்முறை வடிவங்களின் தொடர்ச்சியின் ஒரு பகுதியே.

கீழே நாம் தொழில் நுட்பம்சார் வன்முறை வெளிப்படுத்தப்படும் 13 விதங்களையும் (மூலம்: Luchadoras MX) இந்த மாதிரியான வன்முறை தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களையும் தருகின்றோம்.

1. அதிகாரமளிக்கப்படாதஅணுகுதலும், அணுகுதலைக்கட்டுப்படுத்தலும்

அதிகாரமின்றி ஒரு நபருடைய கணக்கு அல்லது சாதனங்களுக்கான அணுகுதலைப் பெறுவதற்காக இடம்பெறும் தாக்குதல்கள். இது அதிகாரமளிக்கப்படாத வகையில் தகவல்களைத் திரட்டுதல் மற்றும்/ அல்லது ஒரு நபருடைய கணக்கை அணுக முடியாமல் தடைசெய்தல் என்பவற்றைக் குறிக்கும்.


2. கண்காணித்தலும், பின்தொடர்தலும்

ஒரு நபருடைய நடவடிக்கைகளை, அன்றாட வாழ்வியலை, அல்லது தகவல்களை (அந்தரங்கமானதாகவோ அல்லது பகிரங்கமானதாகவோ) தொடர்ச்சியாகக் கண்காணித்தல்


3. தகவல்களைக்கட்டுப்படுத்தலும், திரிபுபடுத்தலும்

குறித்த தகவல்கள் தொடர்பாக கட்டுப்பாடிழந்ததாகக் கருதக் கூடியவகையில் தகவல்களைத் திரட்டுதல் அல்லது திருடுதல், மற்றும் அதிகாரமின்றி அவற்றை மாற்றும் முயற்சிகளை உள்ளடக்கும்.


4. அச்சுறுத்தல்

வன்முறையான, பாலியல்ரீதியாக அடாவடித்தனமான அல்லது அச்சுறுத்தும் தொனியில் ஒரு நபரை, அவர்களது குடும்பத்தை அல்லது நண்பர்களை அல்லது அவர்களது உடமைகளுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்துடனான பேச்சும், உள்ளடக்கமும் (வாய்மொழி அல்லது எழுத்து, படங்கள், இன்னபிற).


5. பணம்பறித்தல்

பெறுமதியான ஒன்றை வைத்து (உதாரணமாக: தனிப்பட்ட தகவல்கள், அந்தரங்கமானபடங்கள், இன்னபிற) அச்சுறுத்தல் மற்றும் பயங்காட்டுவதன் ஊடாக ஒரு நபரை இன்னொரு நபரின் விருப்பிற்கிணங்கி நடக்க வற்புறுத்தல்.


6. ஆள்மாறாட்டமும், அடையாளத் திருட்டும்

ஒரு நபரது சம்மதமின்றி அவரது அடையாளத்தை மோசடியாகப் பாவித்தல்.


7. தனிப்பட்ட தகவல்களை சம்மதமின்றி பகிர்தல்

ஒரு நபர் பற்றிய தகவல்கள், தரவு, அல்லது தனிப்பட்ட விபரங்களின் அதிகாரமளிக்கப்படாத பகிர்தல் அல்லது வெளியீடு.


8. பாரபட்சமானபேச்சு

பெண்கள் மற்றும் பால்நிலை-உறுதிப்படுத்தாதவர்களின் உடல்களையும், இரண்டாம் பட்சமாக்கி, பாலியல்ரீதியானதாக அல்லது இறுக்கமாக மீளுற்பத்தி வகிபங்கு பற்றியதாக கலாசார முன்மாதிரிகளை வெளிப்படுத்தும் பேச்சு.


9. இழிவுபடுத்தல்

ஒரு நபருடைய குழுவுடைய, அல்லது முயற்சியின் நம்பகத்தன்மைக்கு, தொழில் வாழ்க்கைக்கு, பணிக்கு அல்லது பொதுஅபிப்பிராயத்துக்கு பிறழ்வான, திரிபுபடுத்தப்பட்ட, தேவையற்ற தகவல்களைப் பரப்புவதன் ஊடாக அவதூறிழைத்தல், தூற்றுதல் மற்றும்/ அல்லது குந்தகம் விளைவித்தல்.


10. துன்புறுத்தல்

ஒரு நபருக்கெதிராக, ஊடுருவும், தொல்லைப்படுத்தும், அச்சுறுத்தும் வகையிலான, திரும்பத் திரும்பச் செய்யப்படுகின்ற, விரும்பத்தகாத செயற்பாடுகள். இச்செயற்பாடுகள் பாலியல்ரீதியானதாகவோ, இன்றியோ இருக்கலாம்.


11. தொழில்நுட்பத்தினூடான பாலியல் துஸ்பிரயோகமும், சுரண்டலும்

அடிப்படை சாதனமாக தொழில்நுட்பத்தை வைத்து, ஒருவரது விருப்பின்றி, படங்கள் மற்றும்/ அல்லது உடலின் மீதான சுரண்டலின் அடிப்படையில் ஒருவர் மீது அதிகாரத்தினைச் செலுத்தும் செயற்பாடு.


12. தொடர்பாடல் ஊடகங்களில் இடம்பெறும் தாக்குதல்கள்

ஒரு நபரினது அல்லது குழுவினது தொடர்பாடல் அல்லது தகவல்களை ஊடகங்களில் பரிமாறாமலிருக்கச் செய்வதற்கென திட்டமிட்டுச் செய்யப்படும் தந்திரங்களும், செயற்பாடுகளும்.

13. நெறிப்படுத்த வேண்டியவர்களின் பாராமுகம்

தொழில்நுட்பம்சார் தாக்குதல்களை நெறிப்படுத்தக்கூடிய, தீர்க்கக்கூடிய, மற்றும்/ அல்லது தண்டிக்கக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருக்கின்ற பாத்திரதாரிகளது (அதிகாரசபைகள், இணைய இடைத்தரகர்கள், நிறுவகங்கள், சமுதாயங்கள்) அலட்சியம் அல்லது அங்கீகாரமாயின்மை, அங்கீகாரம் அல்லது செயற்பாடுகள்.

சட்டங்கள்

தேசியரீதியானவை

தொழில் நுட்பம்சார் வன்முறையை நேரடியாகக் கையாளக் கூடியதொரு சட்டம் இலங்கையில் இல்லை. ஆனால் தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவுகள் சிலவும், ஏனைய சில சட்டங்களும் இது தொடர்பாக பிரயோகிக்கப்பட முடியும்.

தண்டனைச் சட்டக் கோவை

பிரிவு 345 –பாலியல் துன்புறுத்தல் பற்றியது

பிரிவு 372 – பணம் பறித்தல் பற்றியது

பிரிவு 483 –குற்றவியல் அச்சுறுத்தல்

பிரிவு 388 –குற்றவியல் நம்பிக்கை மோசடி

பிரிவு 399 –ஆள்மாறாட்ட மோசடி

கணினி குற்ற சட்டம் – இலக்கம் 24, 2007
பிரிவு 3 – ஒரு கணினியில் அதிகாரமளிக்கப்படாத அணுகுதலைப் பெறுதல் குற்றம்.
பிரிவு 7 – தரவுகளை கையாளுதல் பற்றியது
ஆபாசமான பிரசுரங்கள் (திருத்த) சட்டம் (இல.22, 1983)
வீட்டு வன்முறை தடுப்புச் சட்டம், இல 34, 2005

சர்வதேசரீதியானவை

பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பதற்கான சமவாயம் (சீடோ)

பெண்களுக்கு எதிரான பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பாக சீடோவின் பொதுப் பரிந்துரை இலக்கம் 35 ஆனது “இணைய மற்றும் எண்ணிம வெளிகளில் இடம்பெறும் சமகால வன்முறையின் வடிவங்களைப் போன்று தொழில்நுட்பத்தின் ஊடான சூழலில் இடம்பெறும் வன்முறையினையும் உள்ளடக்கும்” என்கிறது.

சிறுமிகளதும், பெண்களதும் கல்விக்கான உரிமை தொடர்பாக சீடோவினது பொதுப் பரிந்துரை இல 36 (2017)இன் உறுப்புரை 72,“பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான எந்தவொரு வடிவத்திலுமான ICT அடிப்படையில் மற்றும் இணையத்தின் ஊடான துன்புறுத்தலினை” வரையறுத்து, தண்டனை வழங்கக் கூடிய சட்டங்களை இயற்றுக என்கிறது.

இலங்கை சீடோவினை அங்கீகரித்துள்ளதுடன், சமவாயத்தினை முற்றாக அமுல்படுத்தக் கூடிய வகையில் தேசிய ரீதியில் சட்டங்களை உருவாக்க திருத்த அல்லது பொருள்கோடல் செய்ய சட்ட ரீதியான கடப்பாட்டைக் கொண்டுள்ளது.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பொருத்தனை (ICCPR)

ICCPR உறுப்புரை 3 அப்பொருத்தனையில் உள்ளபடி “குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்தையும் துய்ப்பதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள சமஉரிமையினை” வலியுறுத்துகிறது. உறுப்புரை 19,“ஒவ்வொருவரும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான உரிமையினைக் கொண்டிருப்பர்; இவ்வுரிமை எந்தவொரு எல்லையின் மத்தியிலும், சகல விதமான தகவல்களையும், கருத்துக்களையும் வாய்மொழி மூலமாகவோ, எழுத்து அல்லது அச்சின் மூலமாகவோ, கலை வடிவத்திலோ தான் தெரிவு செய்யும் பிற ஊடகங்கள் வாயிலாகவோ ஒருவர் நாடுவதற்கு, பெற்றுக் கொள்வதற்கு அன்றேல் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை உள்ளடக்கும் என்று எடுத்துரைப்பதுடன் அதன் மட்டுப்பாடுகளையும் குறிப்பிடுகிறது.

நிலைபேறான அபிவிருத்திக்கான 2030இன் நிகழ்ச்சி நிரல்

உறுப்புரை 5 பால்நிலை சமத்துவத்தை அடைதலும், அனைத்து பெண்களும், சிறுமிகளும் வல்லமைப்படலும்

உறுப்புரை 16 “நிலைபேறான வளர்ச்சிக்காக அமைதியான, யாவரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குதல், அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல், எல்லா மட்டங்களிலும் வினைத்திறனான, பொறுப்புடைமை வாய்ந்த மற்றும் யாவரையும் உள்ளடக்கும் நிறுவனங்களை உருவாக்குதல்.”